மரபணு பரிசோதனையின் பின்னர் தாயை கண்டுபிடித்த பிரித்தானியாவின் ஷெரீ எச்செசன்

மரபணு பரிசோதனையின் பின்னர் தாயை கண்டுபிடித்த பிரித்தானியாவின் ஷெரீ எச்செசன்

0
304

ஷெரீ எச்செசனின் தாயை கண்டறிவதற்காக முன்னெடுக்கப்பட்ட மரபணு பரிசோதனையின் முடிவு நேற்றிரவு வெளியானது.

மேற்கொண்ட தேடலில் கண்டறியப்பட்ட டிங்கிரி அம்மா என்பவரின் மரபணுவுடன், எச்செசனின் மரபணு 99.99 வீதம் பொருந்துவதாக
பிரித்தானியாவின் எல்பா பயோ லேப் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி பிறந்து, நிரோஷிகா என பெயர் சூட்டப்பட்ட ஷெரீ எச்செசன் 15 நாட்களின் பின்னர் அயர்லாந்து பிரஜைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்த பிறப்புச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் உதவியுடன் அவரின் உண்மையான தாயை கண்டறியும் நடவடிக்கை ஆரம்பமாகியது இதற்கு இலங்கை ஊடகமான நியூஸ்பெஸ்ட் அனுசரணை வழங்கயிருந்தது

ஐக்கிய இராஜ்யத்தின் 35 பிரபல தொழில்நுட்பவியலாளர்களில் ஒருவரான இவரின் உண்மையான தாய் தொடர்பான முக்கியமான தகவல் கடந்த 17ஆம் திகதி எமக்குக் கிடைத்தது.

இதற்கமைய, நாம் இரண்டு குழுவினராக குருணாகல் மற்றும் கம்பஹாவின் வெலிவேரிய பகுதிகளை நோக்கி உறவுத்தேடல் பயணத்தை ஆரம்பித்தோம்.

ஷெரி எச்சேசன் அயர்லாந்து பிரஜைகளிடம் ஒப்படைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றில் காணப்படும் பெண், எச்சேசனின் தாய் என நம்பப்பட்டது.

அந்தப் புகைப்படத்திலிருந்த பெண்ணும், நாம் கண்டறிந்தவரும் ஒரே உருவத்தை ஒத்திருந்தனர்.

ஷெரியிடமிருந்த பிறப்புச்சான்றிதழில் அவரின் தாயார் டிங்கிரி மெனிகா என குறிப்பிடப்பட்டிருந்ததுடன், நாம் கண்டறிந்தவரின் பெயர் டிங்கிரி அம்மா என்பதாகும்.

அந்த சந்தர்ப்பதிலும், டிங்கிரி அம்மாவின் சில புகைப்படங்களை ஷெரீக்கு உறவுத்தேடல் குழுவினர் அனுப்பியிருந்தார்கள்

உறவுத்தேடல் பயணத்தில் பெற்றுக்கொண்ட தகவல்களும், டிங்கிரி அம்மா எமக்கு வழங்கிய பல்வேறு தகவல்கள் பெரும்பாலும் பொருந்தியிருந்தன.

டிங்கிரி அம்மாவை தமது தாய் என ஷெரி ஏற்றுக் கொண்டாலும், அவரின் சில கருத்துக்களில் தடுமாற்றத்தை அவதானிக்க முடிந்தது.

இந்த உறவுத்தேடல் பயணத்தில் நிபுணர்கள் சிலரும் இணைந்து கொண்டமையால், மரபணு பரிசோதனை மேற்கொள்வதற்கு நியூஸ்பெஸ்ட் முகாமைத்துவம் தீர்மானித்தது.

இதன்படி, இரு தரப்பினரின் ஒப்புதலுடன், டிங்கிரி அம்மாவின் மரபணு மாதிரியை, கொழும்பு வடக்கிலுள்ள போதனா வைத்தியசாலையின் உதவியுடன் பெற்று அதனை ஐக்கிய இராஜ்யத்தின் பரிசோதனை நிறுவனத்திற்கு அனுப்பினோம்.

பரிசேதனையின் பின்னர், ஷெரீ எச்செசனின் தாய் டிங்கிரி அம்மா என்பது விஞ்ஞான ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இணையத்தளமூடாக வாக்களிக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளில் ஷெரி முக்கிய பங்காற்றியுள்ளார்.

அவர் இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதுடன், 26 வருடங்களுக்கு முன்னர் தம்மைப் பெற்றெடுத்த அன்புத்தாயாரை முதன் முறையாக சந்திக்கவுள்ளார்.