சதொசவினால் அரிசி இறக்குமதி செய்யப்பட்டபோது 15 பில்லியன் ரூபா நட்டம்: கணக்காய்வு அறிக்கை

0
198

2014, 2015 ஆம் ஆண்டுகளில் லங்கா சதொச நிறுவனத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்பட்டபோது, சுமார் 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதை கணக்காய்வாளர் திணைக்களத்தின் கணக்காய்வு அறிக்கை உறுதிப்படுத்துகின்றது.

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழுக்கூட்டத்தில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து, லங்கா சதொச நிறுவனம் 2014, 2015 ஆம் ஆண்டுகளில் அரிசி இறக்குமதி செய்த முறைமை தொடர்பில் ஆராய
கணக்காய்வாளர் திணைக்களம் தலைப்பட்டது.

நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்த்தியான தரவுகளை உள்ளடக்கிய இந்த அறிக்கை பல்வேறு ஆதாரங்கள் மற்றும் கள ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்காய்வாளர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
# லங்கா சதொச நிறுவன களஞ்சியத்தின் அரிசி தொடர்பாக பரீட்சிப்பதற்காக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் செயலாளரால் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் அறிக்கை.

# இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையிலுள்ள நாட்டின் வருடாந்த நெல் மற்றும் அரிசி உற்பத்தி தொடர்பான தரவுகள்.

# விவசாயத் திணைக்களத்தின் சமூக பொருளாதார மற்றும் திட்டமிடல் நிலையத்தின் நாட்டின் வருடாந்த அரிசி தேவைப்பாடு, உற்பத்தி மற்றும் இறக்குமதி தொடர்பான தரவுகள்.

# கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சிலிருந்தும் பொது திறைசேரியின் பல்வேறு திணைக்களங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்ட உள்ளீடுகள்.

# அரிசி இறக்குமதியுடன் தொடர்புபட்ட கோவைகள்.

# இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக் களஞ்சியம் முத்திரையிடப்படுவது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள்.

# இலங்கை சுங்கத்தின் 2012 முதல் 2015 ஆம் ஆண்டு வரையான அரிசி இறக்குமதி விபரங்கள்.

# நெற்சந்தைப்படுத்தல், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், உணவு ஆணையாளர் திணைக்களத்தின் தகவல்களுடன் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொடர்பான ஆதாரங்கள்.

இவ்வாறாக அரசாங்கப் பொறிமுறையின் முக்கிய இயங்குதளங்களினூடாகப் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே சர்சைக்குரிய அரிசி இறக்குமதி தொடர்பான கணக்காய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

# 2018 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய, மூன்று தசாப்த கால யுத்த சூழ்நிலையின்போது காணாமற்போனவர்களுக்கான அலுவலகத்தை
ஸ்தாபிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதி 1400 மில்லியன்.

# வடக்கு, கிழக்கில் வீடற்றவர்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதி 3000 மில்லியன் ரூபா

# பெருந்தோட்ட வீடமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட நிதி 2000 மில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது.

# வடக்கிலிருந்து வௌியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் வீட்டு வசதி மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 2,750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நான்கு முக்கிய திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியை விட ஒன்றரை மடங்கு கூடுதலான பணத்தை ரிஷாட் பதியுதீனின் கீழ் இயங்கும் சதொச நிறுவனத்தின் முறையற்ற அரிசி கொடுக்கல் வாங்கலினால் நாடு இழந்துள்ளது.

எனினும், நிர்வாகத்திறனற்ற அரிசி இறக்குமதியினால் தேசமடைந்த நட்டமோ 15 பில்லியன்.