900 பணியாளர்களை வேலைநீக்கம் செய்த வெரிசான் நிறுவனம்

0
153

பெரும்பாலான மாணவர்களின் கனவாக இருப்பது எம்.என்.சி கம்பெனிகள் எனப்படும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்குச் சேர வேண்டும் என்பதே. காரணம்… வேலை கடினமாக இருந்தாலும் கைநிறைய சம்பளம், வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்ற எண்ணம்தான். ‘உழைப்பை உறிஞ்சிவிட்டு வெளியே தூக்கிப் போட்டுவிடுவார்கள்’ எனும் மொழியை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது எம்.என்.சி கம்பெனிகளுக்கு அதுவும் இந்தியாவில் இருக்கும் எம்.என்.சி கம்பெனிகளுக்கு மிகப்பொருத்தமாக இருக்கும். எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு வெளியே அனுப்பிவிடுவார்கள். திறமையில்லை என்ற காரணத்தைக் காட்டி வேலை விட்டு நீக்கப்பட்டவர்களைப் பற்றித் தெரிந்திருப்போம். ஆனால், பவுன்சர் பாய்ஸ்களை வைத்து பணியாட்களை மிரட்டி வலுக்கட்டாயமாகக் கையெழுத்து வாங்கிக்கொண்டு வெளியே அனுப்பியிருக்கிறது அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனமான வெரிசான்.

வலுக்கட்டாய வேலைப்பறிப்பு!

சென்னை தரமணியில் வெரிசான் டேட்டா சர்வீசஸ் இந்தியா (Verizon Data Services India (VDS India)) என்ற நெட்வொர்க் செக்டார் (network sector) நிறுவனம் இயங்கிவருகிறது. இது உலகம் முழுவதும் பல நாடுகளில் இயங்கி வருவதுடன், இந்தியாவில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களிலும் இயங்கி வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் சுமார் 7,000-க்கும் அதிகமான பணியாளர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றிவருகின்றனர். இந்தநிலையில், கடந்த 12 ஆம் தேதி காலையில் சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் செயல்பட்டு வந்த வெரிசான் நிறுவனங்களிலிருந்து பணியாளர்கள் அதிரடியாக வேலையை விட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுவும் பணியாளர்களை வெளியேற்றும்போது, முரண்டுபிடித்தவர்களை செக்யூரிட்டி மற்றும் பவுன்சர் பாய்ஸ்களைக் கொண்டு வெளியேற்றியுள்ளது வெரிசான் நிறுவனம். அப்படி வலுக்கட்டாயமாகப் பணியாளர்களை வெளியேற்றும்போது ஏற்படும் தள்ளுமுள்ளில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் முதலுதவிக்காக இரண்டு மருத்துவர்களைக் கொண்ட ஒரு ஆம்புலன்ஸையும் தயார் நிலையில், வைத்திருந்திருக்கிறது. 12 ஆம் தேதி ஆரம்பித்த இந்த அதிரடி வேலை நீக்கம் 14ஆம் தேதி வரை நடந்திருக்கிறது. பணியாளர்களை வேலையை விட்டு வெளியேற்றும் இந்த வேட்டை மூன்று நாள்கள் நடந்திருக்கின்றன. இதில் இதுவரை 900 -க்கும் அதிகமானோர் வேலையை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஐ.டி செக்டாரில் பணியாற்றக்கூடிய அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

பவுன்சர்களை வைத்து மிரட்டினர்!

வெரிசான் நிறுவனத்தின் இந்த முடிவைப்பற்றி ‘தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் சங்கத்தினரை’த் தொடர்புகொண்டு பேசியபோது, “யாகூ நிறுவனத்தை வெரிசான் வாங்கிவிட்டது. அதனால் பல மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக அதிரடியாகப் பல பணியாளர்களை நீக்கியுள்ளனர். 12 ஆம் தேதி காலையில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்களிடம் திடீரென ‘நீங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள்; உங்களை வேலையை விட்டு நீக்கிவிட்டோம்’ என்று கூறியுள்ளனர். பணியாளர்கள் காரணம் கேட்டதற்கு ‘அப்ரைசலில் சென்ற ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை உங்கள் பெர்ஃபாமன்ஸ் மிகக் குறைவாக இருக்கிறது. உங்களுக்கு இந்த நிறுவனத்தில் பணியாற்றப் போதிய திறமை கிடையாது’ என்று காரணம் சொல்லி வலுக்கட்டாயமாக விடுவிப்பு விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். முரண்டு பிடித்தவர்களை பவுன்சர் பாய்ஸ்களை வைத்து மிரட்டி கையெழுத்து வாங்கிக் கொண்டனர். கடிதத்தில் என்ன எழுதியிருந்தது என்பதைக்கூட பணியாளர்கள் படித்துப் பார்க்க வாய்ப்பு கொடுக்கவில்லை. அமெரிக்காவிலும் இந்த நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்துள்ளனர். ஆனால், அங்கு இரண்டு வருட சம்பளப் பணத்தை கொடுத்துவிட்டு பின் வெளியேற்றியுள்ளார்கள். ஆனால், இங்கு 4 மாதம் சம்பளம் கொடுத்துவிடுகிறோம் என்று சொல்லிவிட்டு வெளியேற்றியுள்ளனர். இதற்கு நியாயம் கேட்டு ஐ.டி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்” என்றனர்.

திடீர் வேலை நீக்கம் செய்யப்பட்டதற்கான பின்னணி!

”தேடுபொறிகளில் 2000-க்கு முன்புவரை அரசனாக இருந்த யாகூ நிறுவனம், கூகுளின் அசுர வளர்ச்சியால், 2000-க்குப் பிறகு வீழ்ச்சியடையத் தொடங்கியது. இதனால், கடந்த 2016 ஆம் ஆண்டு யாகூ நிறுவனத்தை வெரிசான் நிறுவனம் 4.8 பில்லியன் டாலருக்கு வாங்கிவிட்டது. தற்போது வெரிசான் மற்றும் யாகூ நிறுவனங்கள் முழுமையாக இணைவதற்கான வேலைப்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் யாகூ நிறுவனத்தின் தேடு பொறி, இ-மெயில், செய்திகள், வணிகம், விளையாட்டு, வீடியோ சேவை, போன்றவை வெரிசான் நிறுவனத்தின் கீழ் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு நடவடிக்கையாகத்தான் இந்த ஆட்குறைப்பு. ஆட்களைக் குறைத்துவிட்டு அவர்களுக்குப் பதிலாக ஆட்டோமேஷன் சிஸ்டத்தைப் பயன்படுத்துவதற்காகத்தான் பணியாளர்களின் வேலையைப் பறித்துள்ளனர் என்று ஐ.டி பணியாளர்கள் மத்தியில் காரணம் சொல்லப்படுகிறது. ஆனாலும் இன்னும் எத்தனை பணியாளர்களுக்கு நிறுவனம் பிங்க் சிலிப் (வேலையை விட்டு நீக்கும் முன் கொடுக்கப்படும் அடையாளம்) கொடுத்திருக்கிறது என்பது பற்றிய விவரம் சரியாகத் தெரியவில்லை” என்கின்றனர் ஐ.டி பணியாளர்கள்.