இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகை காலாவதி – அமெரிக்கா

0
129

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்காவில் கிடைத்து வந்து ஜிஎஸ்பி வரிச்சலுகை இன்றுடன் காலாவதியாகவுள்ளது என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திரத்திற்கு விழுந்த அடியாக இதனை சிலர் பார்க்கின்றார்கள்.

அமெரிக்காவின் இந்த திடீர் முடிவுக்கு காரணம், ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு இலங்கை அரசாங்கம் எதிராக ஐ.நாவில் வாக்களித்திருந்தது.

இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர், தமக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகளுக்கான அமெரிக்காவின் நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

எனினும், அமெரிக்காவின் இந்த மிரட்டலையும் பொருள்படுத்தாமல் 128 நாடுகள் ஐ.நாவில் வாக்களித்திருந்தன. 9 நாடுகள் மாத்திரமே அமெரிக்காவை ஆதரித்திருந்தன. மற்றைய நாடுகள் அமெரிக்காவை எதிர்த்தன. கடும் சீற்றமடைந்தது அமெரிக்கா

ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகரமாக ஏற்றுக்கொள்ளவிருக்கும் செய்தியை அமெரிக்கா அறிவித்த போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதை தான் எதிர்ப்பதாகவும், இந்த முடிவு மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதன்படியே ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் அமெரிக்காவிற்கு எதிராக இலங்கை துணிந்து வாக்களித்தது.

இந்நிலையில், எதிராக வாக்களித்த நாடுகளுக்கான நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது. அதன் அங்கமாக இன்று பிறந்திருக்கும் 2018ம் ஆண்டிலிருந்து இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்காவில் கிடைத்து வந்த ஜிஎஸ்பி வரிச்சலுகை காலாவதியாகிறது.

இலங்கை அரசாங்கத்திற்கு பிரதான ஏற்றுமதிச் சந்தையாக அமெரிக்காவே திகழ்கிறது. 2016ஆம் ஆண்டில், அமெரிக்காவுக்கு, 2.8 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்றும், அமெரிக்கத் தூதரகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

2014ஆம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 2.5 பில்லியன் டொலர் பொருட்களில், கிட்டத்தட்ட 7 வீதம் அல்லது, 179 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்கள் ஜிஎஸ்பி திட்டத்தின் கீழேயே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

எனவே, இப்பொழுது வரிச் சலுகை நிறுத்தப்படும் பொழுது இலங்கையின் பொருளாதாரத்தில் பலவீனத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

முன்னதாக இலங்கை தேயிலையில் வண்டு இருந்ததாக கூறி, ரஷ்யா இலங்கை தேயிலையை ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிகத் தடையை விதித்தது. அந்தத் தடையை நீக்குவதற்கு இலங்கை அரும்பாடுபட்டு மீண்டும் ஏற்றுமதிக்கான ஒப்புதலைப் பெற்றுக் கொண்டது.

அந்தச் பிரச்சினை தீர்வதற்கு முன்னர் இன்னொரு பிரச்சினை வந்து நிற்கிறது. 2018ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் ஏமாற்றுத்துடனான ஆண்டாக பிறக்கிறது என்கிறார்கள் கிண்டல் செய்யும் எதிர்த் தரப்பு அரசியல் விமர்சகர்கள்.