சைட்டம் மருத்துவ கல்லூரி ரத்து! அரசாங்கம் அறிவிப்பு

0
102

மாலபே – சைட்டம் மருத்துவக் கல்லூரியினை நீக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு வடிவத்தைக் இங்கே காணலாம்.

2017ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ம் திகதி ஜனாதிபதி அவர்களினால் சைட்டம் பிரச்சினையினை தீர்ப்பதற்காக வெளியிட்பட்ட அறிக்கையில் காணப்படுகின்ற அம்சங்களை நிறைவேற்றுவதற்காக 09 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், சைட்டம் பிரச்சினையினை தீர்ப்பதற்காக பின்வரும் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.

சைட்டம் நிறுவத்தினை இல்லாதொழித்து அதன் அனைத்து சொத்துக்கள், பொறுப்புக்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சிகள் தொடர்பில் ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஆகக் குறைந்த தரத்தின் அடிப்படையில் (அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது) ஸ்தாபிக்கப்பட உள்ள பட்டமளிக்கின்ற முன்மொழியப்பட்டுள்ள அரச சார்பற்ற மற்றும் இலாப நோக்கமற்ற (செலவினை மிஞ்சிய இலாபம் பெறப்படும் போது அதனை பங்குதாரர்களிடத்தில் பிரித்துக் கொள்ளாது நிறுவனத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கு அல்லது மாணவர்களுக்கு பெற்றுக் கொள்வதற்காக பயன்படுத்தல்) நிறவனத்துக்கு ஒப்படைக்க வேண்டும்.

சட்ட ரீதியாக இத்தீர்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்காக ஒன்றுக்கொன்று வேறுபட்ட இரு நிறுவனங்களை ஆரம்பிக்க வேணடும் என்பதுடன், இவ்விரு நிறுவனங்களும் மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சி தொடர்பிலான ஆகக் குறைந்த தரத்தின் அடிப்படையில் அமைதல் வேண்டும். அந்நிறுவனங்கள் இரண்டும் பின்வருமாறு:

அ. சைட்டம் நிறுவனத்தில் தற்போதுள்ள அனைத்து மாணவர்களையும் இணைத்துக் கொண்டு மற்றும் சைட்டம் நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை பெற்றுக் கொண்டு சைட்டம் நிறுவனத்தினை இல்லாதொழிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனம். இதற்காக புதிதாக மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள்.

ஆ. 2019ம் ஆண்டிலிருந்து மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக வேண்டி ஸ்தாபிக்கப்படுகின்ற இலாப நோக்கமற்ற புதிய நிறுவனம். 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் திகதி இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் சைட்டம் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சைட்டம் நிறுவனமானது இல்லாதொழிக்கப்பட்டு இந்நாட்டில் முன்னணி வகிக்கும் அரச சார்பற்ற, இலாப நோக்கமற்ற பட்டமளிக்கும் நிறுவனமான இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனமானது முன்மொழியப்பட்டுள்ள இப்புதிய இரு நிறுவனங்களை ஆரம்பிப்பதுடன், அதற்காக அரசாங்கத்தின் வழிகாட்டல்கள் கிடைக்கும்.

சட்டமாதிபர் திணைக்களத்தின் அங்கீகாரத்தினை பெற்றதன் பின்னர் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தமான சட்ட ரீதியான ஒப்பந்தமாக கொள்ளப்படும். முன்வைக்கப்பட்ட பிரதான குற்றச்சாட்டுகளுக்கு இத்தீர்மானத்தின் மூலம் தெளிவான பதிலொன்று கிடைத்துள்ளது.

1.மருத்துவ கல்வி தொடர்பில் இலங்கையில் காணப்படுகின்ற உயரிய தரம் சைட்டம் நிறுவனத்தில் காணப்படவில்லை என எழுந்த குற்றச்சாட்டு.

2. சைட்டம் நிறுவனத்துக்குரிய இலாபம் பெறும் நோக்கம், கல்வியின் பெறுமதிக்கு தடை என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு.

இலங்கையில் மருத்துவ தொழிலுக்காக தேசிய தரத்தினை உருவாக்கி முன்னெடுத்துச் செல்கின்ற இலங்கை மருத்துவ சபையானது மருத்துவ கல்வி மற்றும் பயிற்சிகள் தொடர்பான கட்டாயப்படுத்தப்பட்ட ஆகக் குறைந்த தர தொகுதியொன்றை முன்மொழிந்ததுடன், 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் திகதி அமைச்சரவையின் மூலம் அது சிறு திருத்தங்களுடன் அங்கீகரிக்கப்பட்டது.

அ. அதனடிப்படையில், சைட்டம் நிறுவனத்தின் அனைத்து தற்போதைய மாணவர்களையும் இணைத்துக் கொண்டு சைட்டம் நிறுவனத்தினை மூடிவிடுவதற்காக வேண்டி ஸ்தாபிக்கப்படுகின்ற நிறுவனத்தில், மருத்துவ கல்வி மற்றும் பயிற்சியினை இவ்வாகக் குறைந்த தரத்தின் அடிப்படையில் இலங்கை மருத்துவ சபை அங்கீகரிக்கும்.

அதேபோன்று, சைட்டம் நிறுவனத்தின் மூலம் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு இத்தரங்களுக்கு ஏற்ப இணைத்துக் கொள்ளல் மற்றும் பதிவினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி இலங்கை மருத்துவ சபையின் மூலம் மேலுமொரு செயன்முறையொன்று (மருத்துவ பயிற்சிகள் மற்றும் அரச வைத்தியசாலைகளில் மதிப்பீட்டு நடவடிக்கைகள்) அறிமுகப்படுத்தப்படும்.

ஆ. 2019ம் ஆண்டிலிருந்து மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக வேண்டி ஸ்தாபிக்கப்படுகின்ற நிறுவனமானது இலங்கை மருத்துவ சபை புதிதாக அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன், இதற்காக இந்நிறுவனம் ஆகக் குறைந்த தரத்தினை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

இவ்விரண்டு நிறுவனங்களும் எவ்வித இலாப நோக்கமும் இன்றியே செயற்படும். இங்கு, 2019ம் ஆண்டிலிருந்து மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக வேண்டி ஸ்தாபிக்கப்படுகின்ற நிறுவனம் ´பிணையிலிருந்து மட்டுப்படுத்தப்பட்ட நிறுவனம்´ ஆவதுடன், இங்கு மாணவர்களிடத்தில் இருந்து கட்டணம் ஒன்று அறவிடப்படும் போதும், அது நிறுவனத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அல்லது ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு அல்லது புலமை பரிசில்கள் பெற்றுக் கொடுப்பதற்கு பயன்படுத்தப்படும்.

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இதற்கான பொருத்தமான தரப்பினர் என்பதுடன் உயர் தரத்தில், இலாப நோக்கமற்ற, மாணவர்களுக்கு உயர் கல்வியினை பெற்றுக் கொடுப்பதில் இரு தசாப்த கால அநுபவத்தினை இந்நிறுவனம் கொண்டுள்ளது.

அதனடிப்படையில், இப்பிரயோக ரீதியான மற்றும் சாதாரண முடிவின் மூலம் சைட்டம் நிறுவனத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரதான இரு குற்றச்சாட்டுகளுக்கும் முடிவொன்று கிடைக்கின்றது.

மேலும், நெவில் பிரனாந்து போதனா வைத்தியசாலை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரப்படுவதுடன், இதன் மூலம் அரச சுகாதார துறைக்கு 3.2 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்தொன்று புதிதாக இணைத்துக் கொள்ளபடுகின்றது.

இம்முடிவிற்காக சைட்டம் நிறுவனம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழுவின் 09 உறுப்பினர்களும் ஒருமித்த முறையில் இணக்கத்தினை தெரிவித்துள்ளனர்.

இக்குழுவின் தலைமை பொறுப்பினை தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அவர்கள் வகிப்பதுடன், சுகாதார, போசனை மற்றும் தேசிய மருத்துவ அமைச்சின் செயலாளர், உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர், இலங்கை மருத்துவ சபையின் தலைவர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உபவேந்தர்கள், கொழும்பு மற்றும் களனி பல்கலைக்கழக மருத்துவ பீடங்களின் பீடாதிபதிகள் இக்குழுவின் ஏனைய அங்கத்தவர்களாவர்.

இத்தீர்மானங்கள் தொடர்பான விடயங்களை கலந்துரையாடுவதற்காக இக்குழுவானது 03 முறை கூடியதுடன், மருத்துவ விசேட நிபுணர்கள் சங்கம், இலங்கை மருத்துவ சபை, அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் (GMOA, மருத்துவ பீட விரிவுரையாளர்களின் சம்மேளனம், அரச பல்கலைக்கழகங்களின் மருத்துவ மாணவர்களின் பெற்றோர்களின் சங்கம் மற்றும் சைட்டம் மருத்துவ மாணவர்களின் பெற்றோர்களின் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் இக்கலந்துரையாடலின் இடைக்கிடையே மேற்பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

இம்முடிவின் மூலம் இலங்கையர்கள் வெற்றி பெறுவதுடன் குறுகிய அரசியல் தேவைகளுக்காக இம்முடிவிற்கு எதிராக செயற்பட்டு எமது பிள்ளைகளின் எதிர்காலத்தினை இருளுக்குள் தள்ளுவதற்காக எவரும் செயற்பட மாட்டார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.