கடும் குளிரால் உறைந்துபோன நயாகரா நீர்வீழ்ச்சி

0
191

கடும் குளிரால் அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயிருப்பதை சுற்றுலாப்பயணிகள் பிரமிப்புடன் பார்த்து செல்கின்றனர்.

அமெரிக்காவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் நிறைந்துள்ளது.

கொட்டும் பனியால் சாலைகள் மரங்கள் வீடுகள் என அனைத்தும் வெண்பட்டு போர்த்தியது போன்று காட்சியளிக்கிறது. கடுமையான குளிரும் நிலவி வருவதால் அங்குள்ள ஏரிகள் உறைந்துக் காணப்படுகிறது.

அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற மற்றும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான நயாகரா நீர்வீழ்ச்சி பனியால் உறைந்து போய்யுள்ளது. நயாகரா நீர்வீழ்ச்சி வடஅமெரிக்கக் கண்டத்தில் உள்ள கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துக்கும் ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க்கிற்கும் இடையே அமைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக, வட அமெரிக்கா, நியுயார்க் உள்ளிட்ட நகரங்களில் பனிப்போர்வை போர்த்தியுள்ள நிலையில் கடும் குளிர் நிலவிவருகிறது. அதிகபட்சமாக மவுண்ட் வாஷிங்டனில் மைனஸ் 34 டிகிரி குளிர் நிலவி வருகிறது.

இந்நிலையில் ரம்மியமாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியும் கடும் குளிரில் இருந்து தப்பவில்லை. ஆர்பரித்து கொட்டும் நீரால் பல மீட்டர் தொலைவுக்கு எங்கும் தண்ணீர் சிதறும் நயாகரா நீர்வீழ்ச்சி பகுதி தற்போது உறைந்து போயுள்ளது.

நயாகரா நீர்வீழ்ச்சி முழுவதுமாக உறையவில்லை. ஆனால் தண்ணீர்கொட்டும் பகுதியை தவிர சுற்றியுள்ள பகுதிகள் ஹாலிவுட் படங்களில் காட்டப்படும் பனிப்பிரதேசங்களை போல் வெள்ளை வெளேர் என உறைந்துபோயுள்ளது.

முற்றிலும் உறையாவிட்டாலும் சிறிய அளவில் தண்ணீர் கொட்டி வருகிறது. பனிக்கட்டிகளாலும் மூடுபனிகளாலும் சூழப்பட்டு அன்டார்டிகா பிரதேசம் போல காட்சியளிக்கிறது நயாகரா நீர்வீழ்ச்சி.

நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள மரங்களும் வெள்ளை நிறத்தில் பொம்மை மரங்களைப் போல் உறைந்துள்ளது. ஐஸ்கட்டியாய் மாறிப்போன நயாகரா நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் பிரமிப்புடன் ரசித்து செல்கின்றனர்.

தண்ணீர் கொட்டினாலும் சுற்றியுள்ள பனியால் நீர்வீழ்ச்சியே பனிக்கட்டியாய் மாறியதாக தெரிகிறது. நீர்வீழ்ச்சியை நெருங்க முடியாத அளவுக்கு கடுமையான குளிரும் நிலவி வருகின்றது.