வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்வதற்கு தடை

0
128

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்குள் வியாபாரம் செய்வதற்கு தமக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக நடமாடும் வியாபாரிகள் சக வாழ்வு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கான மாற்றுவழி குறித்து இன்று காலை சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.இந்த கலந்துரையாடலின் போது நடமாடும் வியாபாரிகள் சக வாழ்வு சங்க உறுப்பினர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நாளைய தினம் காலை 10 மணியளவில் புதிய பேருந்து நிலையத்திலுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களிடமிருந்து சந்திப்பு ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் தமக்கு சாதகமான பதில் கிடைக்காது விடின் மேற்கொண்டு வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைச் சந்தித்து எமது சங்க உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளை எடுத்துக்கூறி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவித்த நடமாடும் வியாபாரிகள் சக வாழ்வு சங்கத்தினர், நாங்கள் கடந்த 7 தினங்களாக பணியின்றி இருந்து வருகின்றோம். எனவே எமக்கு இந்த பிரச்சினை தொடர்பில் சாதகமான பதில் நாளைய தினம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளனர்.