மகாவலியின் நிறைவு, மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டம் திறந்து வைப்பு

0
88

நான்கு தசாப்தங்களின் பின்னர் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட, மிக பிரம்மான்ட பல்நோக்கு அபிவிருத்தித் திட்டமான மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த விழா நடைபெற்றது.

மகாவலி திட்டத்தின் முதற் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட பொல்கொல்ல, போவதென்ன திட்டத்தை 1976 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க திறந்து வைத்தார்.

மகாவலி திட்டத்தின் இறுதி அபிவிருத்தித் திட்டமாக மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டம் அமைந்துள்ளது.

2007 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், பல்வேறு காரணங்களால் தாமதடைந்திருந்ததுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்ததையடுத்து அந்தப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

நக்கிள்ஸ் மலை தொடரிலிருந்து அம்பன்கங்க ஊடாக செல்லும் நீரோட்டத்தை மறித்து இந்த நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மொரகஹகந்தையை அண்மித்து உள்ள களு கங்கயை மறித்து நிர்மாணிக்கப்படுகின்ற புதிய நீர்த்தேக்கத்தின் நீரும் மொரகஹகந்த நீர்ப்பானத் திட்டத்துடன் இணைக்கப்படவுள்ளது.

கற்கள், கொங்கிரீட் மற்றும் மண் ஆகியவற்றினால் அமைக்கப்பட்ட மூன்று அணைக்கட்டுக்களைக் கொண்ட ஒரேயொரு நீர்த் தேக்கமாகவும் மொரகஹகந்த நீர்த் தேக்கம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

இதன் நீரைக் கொண்டு 300,000 ஏக்கரில் புதிதாக நெற் செய்கையை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் 15 இலட்சம் விவசாயிகள் நன்மையடையவுள்ளனர்.

அத்தோடு மேலும் மூன்று இலட்சம் பேர் சுத்தமான குடிநீரை பெறவுள்ளனர்.

இந்த நீர்த் தேக்கத்தின் மொத்த கொள்ளளவு ஆறு இலட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் அடிகள், என்பதுடன் இது பராக்கிரம சமூத்திரத்தை விட ஆறு மடங்கு கொள்ளளவு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நீர்த் தேக்கத்தில் தற்போது 99 வீதம் நீர் நிரம்பியுள்ளது.

மொரகஹகந்த- களுகங்கை நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள சுமார் 2000 சிறு குளங்களுக்கு நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

இதில் வடமேல் மாகாணத்தின் 303 குளங்களும், வட மத்திய மாகாணத்தின் 1600 குளங்களும் அடங்குகின்றன.

இந்த திட்டத்தின்கீழ் லக்கல மற்றும் மெதிரிகிரிய ஆகிய பகுதிகளில் நீர்மாணிக்கப்படுகின்ற புதிய நகரங்கள் மற்றும் குடியேற்றங்களில் புதிதாக 48 குளங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்த நீர்த் தேக்கதின் மூலம் வருடாந்தம் 3000 தொன் நன்னீர் மீன் உற்பத்தியை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வருடாந்தம் 225 மில்லியன் ரூபா வருமானம் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் ஊடாக 25 மெகாவொட் மின்சாரம் தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது.

ஐந்து பிரம்மான்ட நீர்த் தேக்கங்களின் இறுதி நீர்த் தேக்கமான மொரகஹகந்த நீர்த் தேக்கம் திறந்து வைக்கப்பட்டதன் மூலம் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் ஜனவரி எட்டாம் திகதி பொல்கொல்லையில் ஆம்பிக்கப்பட்ட மகாவலி பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் நிறைவுபெற்றுள்ளது.