திவுலப்பிட்டியில் பலத்த காற்றினால் நூற்றுக்கும் அதிக வீடுகள் சேதம்

0
115

திவுலப்பிட்டிய பகுதியை ஊடறுத்து வீசிய பலத்த காற்றினால் நூற்றுக்கும் அதிக வீடுகள் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணங்கள் வழங்கப்படுவதாக கம்பஹா மாவட்டத்தின் இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் அஜித் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பலத்த காற்று காரணமாக 500 க்கும் அதிகமானோருக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று இரவிற்குள் மின்விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக் ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை மாவட்டம் வின்சன்ட் தோட்டத்தில் 118.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் மொரலிஓய பகுதியில் 110. 3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், அநுராதபுரத்தில் 106.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்றும் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை சில கடற்பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.