முறிகள் மோசடி: ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

0
165

முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் இந்த அறிக்கையை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் கையளித்துள்ளனர்.

முறிகல் விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் பிரதிகளை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் அறிவித்தமைக்கு இணங்க இன்று அந்தப் பிரதிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

இதற்கமைய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 26 பிரதிகள் இன்று பாராளுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தவிர அண்மையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் 34 இடைக்கால அறிக்கைகளின் பிரதிகளும் இறுதி அறிக்கையின் பிரதியொன்றும் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டார்.

இந்த அறிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி முற்பகல் வேளையில் அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது.

இன்றைய தினம் கையளிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு தௌிவுபடுத்தப்படவுள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.