கிழக்கு மாகாண முஸ்லிம்களை இழிவுபடுத்திய ஷபீக் ரஜாப்தீன் ராஜினாமா

0
100

கிழக்கு மாகாண முஸ்லிம்களை இழிவுபடுத்தி முகநூலில் கருத்து வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவருமான ஷபீக் ரஜாப்தீன் அப்பதவிகளில் இருந்து இன்று புதன்கிழமை ராஜினாமா செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறித்த விடயம் தொடர்பில் விளக்கம் கோரியதை தொடர்ந்தே ஷபீக் ரஜாப்தீன் இத்தீர்மானத்தை மேற்கொண்டதாக அந்தக் கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர் கூறினார்.

சம்மாந்துறையை சேர்ந்த முகநூல் நண்பர் ஒருவருடன் மெசஞ்ஜர் மூலம் சமகால அரசியல் தொடர்பாக விவாதிக்கும்போது கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் செயற்பாடுகளை விமர்சித்தும் இழிவுபடுத்தியும் ஷபீக் ரஜாப்தீன் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதனை குறித்த நபர் முகநூல் வாயிலாக அம்பலப்படுத்தியதை தொடர்ந்து அவர் மீது பலத்த கண்டனமும் விமர்சனமும் எழுந்திருந்தது.

ஷபீக் ரஜாப்தீனின் இந்த நடவடிக்கையினால் கட்சி மீதும் தலைமைத்துவம் மீதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்ததுடன், இவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கட்சி முக்கியஸ்தர்களும் இதற்கு அழுத்தம் கொடுத்திருந்தனர்.

இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறித்த விடயம் தொடர்பில் ஷபீக் ரஜாப்தீனிடம் விளக்கம் கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்தே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்தும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவர் பதவியில் இருந்தும் தான் விலகிக் கொள்வதாக இன்று புதன்கிழமை அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு ஷபீக் ரஜாப்தீன் அறிவித்துள்ளார்.

ஷபீக் ரஜாப்தீன் கட்சியின் கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.