சிறுமியை கடத்தி துஸ்பிரயோகம் செய்த கொலைக் குற்றவாளிக்கு இளஞ்செழியன் கொடுத்த தண்டனை

0
137

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றத்துக்காக, கொலைக் குற்றவாளி ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

எனினும் குறித்த நபர் கொலைக் குற்றச்சாட்டுக்காக 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவித்து வருவதால், இந்த வழக்கின் தண்டனையை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து, தீர்ப்பளித்துள்ளார்.

குறித்த நபர்மீது சுமத்தப்பட்டுள்ள 4 குற்றச்சாட்டுக்களில்

“முதலாவது குற்றத்துக்கு 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. 3 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்படுகிறது. அதனை செலுத்தத் தவறின் ஒரு மாத சிறைத் தண்டனையை எதிரி அனுபவிக்கவேண்டும்.

இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது குற்றத்துக்கு 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட தலா 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. தலா 3 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்படுகிறது. அதனை செலுத்தத் தவறின் 3 மாத சிறைத் தண்டனையை எதிரி அனுபவிக்க வேண்டும்.

குற்றவாளிக்கான தண்டனையை ஏககாலத்தில் மன்று விதிக்கிறது. அதன்படி 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டப்பணமாக 12 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 4 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 30 ஆயிரம் ரூபா இழப்பீட்டை குற்றவாளி செலுத்தவேண்டும். அதனை வழங்காவிடின் 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்” என்று மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தண்டனைத் தீர்ப்பளித்தார்.

சிறுமியைக் கடத்திச் சென்றமை மற்றும் பாலியல் தஸ்பிரயோகம் செய்த சம்பவம் உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சந்தேகநபருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது குற்றவாளி ன் மீதான 4 குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக்கொண்டார்.

2012ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை கடத்திச் சென்று கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவத்தில் இணுவிலைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை பிரேமன் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிரான ஆரம்ப விசாரணைகள், மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து குறித்த சந்தேகநபரும் பிணையில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து இன்று இடம்பெற்ற விசாரணைகளில் குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொலைக் குற்றத்துக்காக குறித்த நபருக்கு 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.