இறந்த பின்பும் இலங்கைக் கலைஞனை திரும்பிப் பார்க்காத தென்னிந்திய திரையுலகம்

0
99

கலைஞன் என்பவன் மக்களை மகிழ்விப்பவன், திருப்திப்படுத்துபவன், தன்னுள் இருக்கும் திறமைகளினால் தான் இறந்தாலும் தன்னுடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்பவனே கலைஞன்.

இந்த கலைஞனுக்கு சாதி, மதம், மொழி என்பவை ஒரு தடையாக இருக்காது. திறமை மட்டும் இருந்தால் போதும். தடைகளைத் தாண்டி சாதித்துவிடுவான்.

நடிப்பு, பாடல், ஆடல், கவி இவ்வாறு கலைஞனின் படைப்புக்கள் அனைத்தையுமே மக்கள் விரும்புவார்கள். இவற்றை விரும்பாதவர் என்று இவ்வுலகில் யாரும் இல்லை.

ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் இந்த நிலை சற்று மாறி விட்டது என்றே கூறலாம்.

ஒரு கலைஞனின் முயற்சியாலும், திறமையாலும் உருவாகும் படைப்பை மட்டும் விரும்பும் இவ்வுலகம் அதை படைத்த கலைஞனை புறம்தள்ளுகின்றது என்று கூறினால் அது மிகையாகாது.

ஒரு கலைஞனின் படமோ, அல்லது பாடலோ நன்றாக இருந்தால் அதை ரசிக்கும் மக்கள் அதை படைத்த கலைஞனை ஒரு சில காரணங்களுக்காக ஒதுக்குவதை அண்மையில் மரணமடைந்த இலங்கை பொப் இசைப் பாடகரும், இலங்கை நடிகருமான ஏ. ஈ. மனோகரனின் வாழ்க்கை பிரதிபலிக்கின்றது.

சென்னை கந்தன்சாவடி பகுதியில் வசித்து வந்த இவர் உடல் நலக்குறைவால் அண்மையில் காலமானார். மனோகரன், இந்திய மற்றும் இலங்கை திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார்.

அத்துடன், தமிழ் சிங்களம் கலந்த பொப் பாடலையும் பாடிய உலகளவில் பிரபலம் அடைந்தார். அவர் 5 மொழிகளில் சுமார் 260 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தனக்குள் இருக்கும் திறமைகளினால் பல சாதனைகளை படைத்த இவருக்கும், இலங்கை சினிமா வளர்ச்சிக்கும் பாரிய தொடர்பு உண்டு.

இவ்வாறான நிலையில், 1983க்கு பின்னர் இலங்கை இனப்பிரச்சினை, உள்நாட்டு போர் தமிழ் பொப் இசைக் கலைஞர்களையும் பாதித்தது.

இலங்கையிலிருந்து கலைஞர்கள் பலர் உயிர் பிழைக்க அண்டை நாடுகளுக்கு தஞ்சமடைந்தார்கள்.

அவ்வாறு இந்தியா சென்றவர்தான் சிலோன் மனோகர் என்று அழைக்கப்படும் ஏ. ஈ. மனோகரன்.

இலங்கையில் இவர் நடித்த திரைப்படங்களாக பாசநிலா, வாடைக்காற்று, புதிய காற்று என்பவற்றை குறிப்பிடலாம்.

இந்தியாவில் பல மொழிகளில் இவர் நடித்த திரைப்படங்களாக, பான் மெயில் (தெலுங்கு), தடவரா (மலையாளம்), மாமாங்கம், சக்தி, கழுகன், ஆவேசம் (மலையாளம்), கோளிளக்கம் (மலையாளம்), குரு, காஷ்மீர் காதலி, ராஜா நீ வாழ்க, காட்டுக்குள்ளே திருவிழா, உலகம் சுற்றும் வாலிபன், நீதிபதி, லாரி டிரைவர் ராஜாகண்ணு, தீ, ஜே.ஜே போன்ற திரைப்படங்களை குறிப்பிடலாம்.

இவ்வளவு சாதனைகளை படைத்த கலைஞரின் மரணம் அனைவர் மனதிலும் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்தியாவில் ஒரு சாதாரண கலைஞனுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அதற்காக தென்னிந்திய சினிமாத்துறையும், சங்கமும் குரல் கொடுக்கின்றது.

ஆனால் ஏ.ஈ.மனோகரனின் மறைவுக்கு எந்த நடிகரோ அல்லது நடிகர் சங்கமோ அனுதாபம் தெரிவிக்கவும் இல்லை. அவருடைய வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தவும் இல்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமே.

இவர் ஓர் இலங்கைக் கலைஞர் என்பதால் தான் இந்த வேற்றுமையா? ஆனால் இதில் இன்னுமொரு விடயமும் மறைந்துள்ளது.

இலங்கைக் கலைஞருக்கு இலங்கையிலேயே உரிய இடம் கிடைப்பதில்லை என்பதும் இதற்கு ஒரு காரணமாக உள்ளதா?

இலங்கையில் ஒரு கலைஞர் தனது படைப்புக்களை மக்கள் முன் கொண்டு வந்தால் அதற்கு கிடைக்கும் மரியாதை மற்றும் விருப்பத்தை விட பிற நாடுகளில் இருக்கும் கலைஞர்களுக்கே முதல் உரிமை வழங்கப்படுகின்றது.

இலங்கை கலைஞர்களுக்கு உள்நாட்டிலேயே உரிய இடம் கிடைக்காதபோது வெளிநாடுகளில் எப்படி அந்த உரிமையை எதிர்பார்க்க முடியும்?

இலங்கையர்களுக்காக குரல் கொடுக்கும் ஈழத்து உணர்வாளர்களும் சரி, மனோகரனின் பாடல்களை ரசித்த ரசிகர்களும் சரி இவருக்காக இரங்கல் தெரிவிக்கவும் இல்லை இவருடைய இறுதிச்சடங்கிற்கு வரவும் இல்லை.

இதற்கான காரணம் என்ன என்று யோசிப்பதற்கு முன் மற்றுமொரு விடயம் எம் கண் முன் வருகின்றது.

“மரணம் ஏற்பட்டு விட்டது” என்ற தகவல் அறிந்ததுமே உறர்வினர்கள், தெரிந்தவர்கள், அயலவர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்துவதற்காக வருவார்கள்.

அதுவே மக்கள் மனதைக் கவர்ந்த ஒரு கலைஞன் இறந்து விட்டான் என்ற செய்தி கிடைத்தால் இனி சொல்லத்தான் வேண்டுமா? நிட்பதற்கு கூட இடம் இருக்காமல் கூட்டம் அலைமோதும்.

ஆனால் மனோகரன் என்ற இலங்கை கலைஞனின் மரணத்தில் நடந்தது என்னமோ வேறு. இவருடைய வீட்டில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே மனிதர்கள் இருந்தார்கள்.

சடலத்திற்கு அருகிலும் 4, 5 பேரைத்தவிர வேறு யாரும் இருந்ததாக தெரியவில்லை. இவருடைய சடலம் அடக்கம் செய்யப்பட்ட பின்னரும் கூட இவருக்காக குரல் கொடுத்தவர்கள் என்று யாரும் இல்லை.

இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் கூட இவருக்காக மனமிறங்கியோர் யாரும் இல்லை என்றே கூறவேண்டும்.

இந்தியப் பிரபலங்களுக்காக இலங்கையில் நினைவஞ்சலி செலுத்துவதையும் போராட்டங்கள் நடப்பதையும் கடந்த காலங்களில் கண்டிருக்கின்றோம்.

ஆனால் இலங்கைக் கலைஞன் ஒருவன் இறந்ததற்கு அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய கௌரவம், மரியாதை, அஞ்சலி செலுத்தப்படாதது கவலைக்குரிய விடயமே…

 

 

  • Shalini (மூவம் Tamilwin)