சிறுவனை சரமாரியாக தாக்கிய சிறைக்காவலர்கள் கைது!

0
92

கடந்த 23ஆம் திகதி மாலை கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் சிறைக்காவலர்கள் பயணித்த சிறைச்சாலைப் பேருந்தும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தான்.

குறித்த விபத்து ஏற்பட காரணம், துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவனின் தவறு என தெரிவித்து, சிறு காயங்களுடன் உணவகம் ஒன்றினுள் நின்ற சிறுவனை சிறைக்காவலர்கள் மனிதாபிமானம் இன்றி சரமாரியாக தாக்கியமை புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு மூலம் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

இதன் பிரகாரம் சிறுவனை தாக்கிய குற்றச்சாட்டில் யாழ் சிறைச்சாலை காவலர்கள் நால்வர் இன்று கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (26) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

தாக்கப்பட்டதனை நேரில் கண்ட சாட்சியாக கிளிநொச்சி சுயாதீன ஊடகவியலாளர் ஒருவரது வாக்கு மூலமும் கிளிநொச்சி பொலிஸாரால் கோரப்பட்டுள்ளதுடன் அவரின் கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்ட காணொளியும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த குறித்த நான்கு சிறைச்சாலை அதிகாரிகளையும் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட போது நால்வருக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபா சரீர பிணை வழங்கப்பட்டது.

இதேவேளை எதிர்வரும் 07 ஆம் திகதிக்கு குறித்த வழக்கிற்கான தவனை வழங்கப்பட்டுள்ளது.