365 இலட்சம் ரூபா நிதி மோசடி: பசில் ராஜபக்ஸ, கித்சிறி ரணவக்கவிற்கு எதிரான சாட்சி விசாரணை விரைவில்

0
85

அரசுக்கு சொந்தமான 365 இலட்சம் ரூபா நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் திவி நெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ. ஆர். ஹெய்யன்துடுவ உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய, முறைப்பாட்டின் சாட்சியாளர்களை அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, முறைப்பாட்டை வழிநடத்தும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி வழக்கு விசாரணை ஆரம்பிப்பதற்கு முன் பிரதிவாதிகளுக்கு வழங்கபட வேண்டிய ஆவணங்கள் சிலவற்றை நேற்று (25) நீதிமன்றத்தில் வழங்கினார்.

மேலதிக ஆவணங்கள் தேவையாயின் அது தொடர்பாக அறிவிக்குமாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது உள்ளூராட்சி மன்றங்களினால் கோரிக்கை விடுக்காத நிலையிலும் திவி நெகும அபிவிருத்தி திணைக்களத்தினூடக 365 இலட்சம் ரூபா நிதியைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட ஜி. ஐ. குழாய்களை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் நோக்கில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு விநியோகித்திருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.