இலங்கைத் தேயிலையின் தரம் தொடர்பில் ஜப்பான் அதிருப்தி?

0
89

தேயிலை ஏற்றுமதிக்கு ரஷ்யா விதித்திருந்த தற்காலிகத் தடையின் பின்னர், இலங்கை தேயிலை கைத்தொழிற்துறையைப் பாதிக்கும் மற்றொரு விடயம் தொடர்பில் தகவல் பதிவாகியுள்ளது.

இலங்கை ஏற்றுமதி செய்யும் தேயிலையில் பிரச்சினையுள்ளதாக ஜப்பான் அதிகாரிகள் சிலரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து ஜப்பானுக்கு அனுப்பப்படும் தேயிலையிலுள்ள இரசாயனம் காரணமாக, தேயிலையின் தரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக ”டெய்லி மிரர்” பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

தற்போது தடை செய்யப்பட்டுள்ள Glyphosate க்கு பதிலாக பயன்படுத்தப்படும் களை நாசினியிலுள்ள இரசாயனம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் பதிவாகியுள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கை தேயிலை சபையின் தலைவர் இந்த மாத இறுதியில் ஜப்பானுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவிடம் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, நியூஸ்பெஸ்ட் வினவிய போதிலும், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை.

இதேவேளை, 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தேயிலைக்கு புதிய சட்ட விதிமுறைகளை விதிக்க ஜப்பான் நடவடிக்கை எடுத்திருந்தது.

ஜப்பானின் வௌிவிவகார அமைச்சர் டாரோ கொனோ இலங்கைக்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில், புதிய சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கு இலங்கையின் தேயிலை செய்கையாளர்களுக்கு காலம் செல்லும் என்பதால் அதற்கான கால அவகாசத்தை வழங்குமாறு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதேவேளை, கடந்த வருடம் 14.5 மில்லியன் கிலோகிராமினால் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் 307.07 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டிருந்ததுடன், 4.96 வீதத்தால் உற்பத்தி அதிகரித்தது. இதனால் 0.07 வீதத்தால் ஏற்றுமதி அதிகரித்திருந்தது.

அதாவது, கடந்த வருடத்திற்கான ஏற்றுமதி 2 இலட்சம் கிலோகிராமினால் உயர்வடைந்திருந்தது.