தமிழக மீனவர்கள் 12 பேர் கைது

0
90

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற்பரப்பில் நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்தார்.

தமிழக மீனவர்களின் இரண்டு படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மேலதிக விசாரணைகளுக்காக கடற்றொழில் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் மீனவர்களுக்கு அபராதம் விதிப்பதற்கான சட்டம் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை அரசின் புதிய மீன்பிடி சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.