மின்சார வேலியில் சிக்குண்டு விவசாயி மரணம்

0
113

திருகோணமலை – அத்தாபெந்திவெவ, பெனிக்கிட்டியாவ வயல் பகுதியில் விவசாயி ஒருவரின் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் ரொட்டவெவ, அத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அவ்சதஹாமிகே சுகத் பிரதீப் குமார (45வயது) என பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெனிக்கிட்டியாவ வயலுக்கு நேற்று இரவு காவலுக்காக சென்ற போது வயலை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள யானை மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சடலம் சம்பவ இடத்தில் காணப்படுவதுடன் சடலத்தை நீதவான் பார்வையிட்ட பின்னர் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.