யாழ். பல்கலையின் பெயரை பயன்படுத்தி நன்கொடை பெற்ற தனியார் ஊடக பயிற்சி நிறுவனம்

0
99

தனியார் ஊடக பயிற்சி நிறுவனமொன்று யாழ். பல்கலைக்கழகத்தின் பெயரை பயன்படுத்தி, வெளிநாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து 300 மில்லியன் ரூபாவை திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தனியார் ஊடக நிறுவனமானது, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி முதல் இளம் ஊடகவியளார்களுக்கு பயிற்சியளிக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வந்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு சமர்ப்பிக்கப்பட்ட உள்ளக கணக்காய்வு அறிக்கையொன்றில் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

குறித்த விடயம் இந்த உள்ள கணக்காய்வு அறிக்கையில் உள்ளதாக யாழ். பல்கலையின் துணைவேந்தர் தம்மிடம் உறுதிப்படுத்தியதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நன்கொடையாளர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்பனவற்றுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் Media Resources Training Centre (MRTC), முன்னாள் இயக்குநர் ஒருவரால், பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் ஒரு பகுதியாக ஊடக ஒத்துழைப்பு மற்றும் மாற்றம் Media in Cooperation & Transition (MiCT) என்ற பெயரில் ஒரு போலியான நிறுவனமொன்று ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளிக்கும் திட்டம் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தினால், கடந்த 2002ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

டென்மார்க், நோர்வே மற்றும் சுவீடன் உள்ளிட்ட நாடுகளின் நன்கொடையில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம் 2016ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த பணிகள் முடிவடைந்து விட்டதாக, பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவுக்கு, யாழ். பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான, யாழ். பலக்லைக்கழக கலைப்பீட பட்டதாரி, யாழ். பல்கலைக்கழகத்தின் பெயரை போலியான முறையில் பயன்படுத்தி நன்கொடைகளைக் பெற்று, ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பயிற்சி நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்கொண்டு சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, புதிதாக நிறுவப்பட்டுள்ள ஊடக ஒத்துழைப்பு மற்றும் மாற்றம் நிறுவனத்துக்கும் யாழ். பல்கலைக்கழகத்துக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பீடாதிபதி மற்றும் பல்கலைக்கழக திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, பல்கலைக்கழத்தின் முன்னாள் துணை வேந்தர் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், புதிதாக நிறுவப்பட்டுள்ள ஊடக ஒத்துழைப்பு மற்றும் மாற்றம் நிறுவனம் Media in Cooperation & Transition (MiCT) தொடர்பில் சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம், போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து, பயிற்சிகளுக்கு வெளிநாடுகளிடமிருந்து 300 மில்லியன் ரூபா நன்கொடையை பெற்றுக்கொண்டுள்ளது.

இதில், பயிற்சி நடவடிக்கைகளுக்காக மாதமொன்றுக்கு 5,013,750 ரூபாவை செலவளித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் உள்ளக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், குறித்த குற்றச்சாட்டை ஊடக ஒத்துழைப்பு மற்றும் மாற்றம் நிறுவன அதிகாரி ஒருவர் நிராகரித்துள்ளதுடன், இது ஆதாரமற்றது என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், புதிய ஊடகவியலாளர்களுக்கான தமது பயிற்சிகள் தொடர்வதாகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் அந்த அதிகாரி கூறியதாக குறித்த ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.