விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொண்டால் தடையை நீக்க ஏன் தயக்கம்? – சீ.வீ.கே.சிவஞானம்

0
81

தமிழீழ விடுதலைப் புலிகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் கூறுவாராயின், புலிகள் அமைப்பு ஏன் தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட அமைப்பாக காணப்பட வேண்டுமென வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்தோடு, புலிகள் என்ற போர்வையில் சிறையில் உள்ளவர்கள் மற்றும் காணாமல் போனோர் குறித்த பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய அங்கஜன் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென சீ.வீ.கே. கோரியுள்ளார்.

அண்மையில் யாழில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. போராட்டத்துடன் தொடர்புபடாதவர்கள் எல்லாம் போராட்டப் பாடலை பயன்படுத்த முடியாதென சீ.வீ.கே. குறிப்பிட்டிருந்தார்.

எனினும், தாம் அனைவரும் போராளிகள் என்றும், அப்பாடலை ஒலிபரப்ப அனுமதி உண்டு என்றும் அங்கஜன் குறிப்பிட்டிருந்தார். அத்தோடு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழில் தமிழ்க்கட்சியாக அனுமதிக்கப்பட்டுள்ளதெனவும் அங்கஜன் கூறியுள்ளார்.

இவ்விடயங்கள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு பதிலளித்த போதே அவைத்தலைவர் சிவஞானம் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழில் தமிழ்க் கட்சியாக அனுமதிக்கப்பட்டுள்ளதென அங்கஐன் இராமநாதன் கூறுகின்றார். ஆனால் அவர் கூறுவது போன்று செயற்பட ஐனாதிபதி அனுமதித்துள்ளாரா என்பதை ஐனாதிபதி மூலம் வெளிப்படுத்த வேண்டும். அதுவே வரவேற்றகத்தக்கதாக அமையும். இல்லாவிட்டமால் அது இவரின் தனிப்பட்ட கருத்தாகத்தான் இருக்கும்.

அங்கஜன் சார்பான சுந்திரக் கட்சியில் புலிகளின் பாடலைப் பாடலாம், பிரசாரம் செய்யலாம் என்றால் புலிகள் இன்னும் ஏன் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும்? அந்த தடையை அரசு நீக்க வேண்டுமென அங்கஜன் பகிரங்கமாக கோரிக்கை விட வேண்டும்.

புலிகள் என்ற போர்வையில் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருக்கின்ற அத்தனை அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பு அல்லது ஏதோவோர் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்றும் கோருகின்றோம்.

அடுத்ததாக காணாமல் போனவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் அரசிடம்தானே சரணடைந்தார்கள்? எனவே அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். புலிகளை இப்போது நீங்களும் அங்கீகரித்திருக்கின்றீர்கள் என்ற ரீதியில் அங்கஜன் இவற்றைச் செய்யலாம்.

புலிகள், உரிமைக்காகவே போராடினார்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்ற அங்கஜன், அவர் சார்ந்த கட்சியின் தலைவரான ஐனாதிபதியுடன் பேசி இந்த மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். இவற்றை கோரிக்கையாகவே முன்வைக்கிறேன்” என்றார்.