ட்விட்டரில் போலி தானியங்கி கணக்குகளை விற்பனை செய்த அமெரிக்க நிறுவனம்: விசாரிக்குமாறு உத்தரவு

0
94

போலி தானியங்கி ட்விட்டர் கணக்குகளை ஆரம்பித்து அவற்றை விற்பனை செய்த அமெரிக்க நிறுவனம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க நீதித்துறை உத்தரவிட்டுள்ளது.

தம்மைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்ட விரும்பும் திரை நட்சத்திரங்கள், அரசியல் விமர்சகர்கள், தொழில் முனைவோருக்கு குறித்த நிறுவனம் போலி தானியங்கி ட்விட்டர் கணக்குகளை விற்பனை செய்துள்ளது.

”டேவுமி” எனும் அமெரிக்க நிறுவனம் மீதே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை டேவுமி நிறுவனம் மறுத்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

டேவுமி நிறுவனம் தனது இணையத்தளத்தில் ட்விட்டரில் பின் தொடர்பவர்கள் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்துள்ளது. குறைந்தபட்ச விலை 12 டொலர்கள் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது. அதுபோல, வாடிக்கையாளர்களுக்கு `லைக்ஸ் மற்றும் ரீட்வீட் -களும் விற்பனைக்கு உள்ளதாகக் கூறியுள்ளது.

டேவுமி நிறுவனம் நியூயார்க்கில் பதிவுபெற்ற நிறுவனம் என்றாலும், அதன் ஊழியர்கள் செயற்படுவது ஃபிலிப்பைன்ஸிலிருந்து என நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த காலங்களில் இவ்வாறான நிறுவனங்கள் மீது உறுதியான நடவடிக்கைகள் எதனையும் ட்விட்டர் நிறுவனம் மேற்கொள்ளவில்லை என அதன் மீது குற்றச்சாட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், டேவுமி மற்றும் இதுபோல செயற்படும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் கூறி உள்ளது.