யுத்தத்தில் உயிரிழந்த மக்களிற்காக விளக்கேற்றி அஞ்சலி

0
443

யுத்தத்தில் உயிரிழந்த மக்களிற்காக இன்று கிளிநொச்சியில் மாவட்ட சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியது.

குறித்த அமைப்பின் தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பிரதான சுடர் ஏற்றப்பட்டு பின்னர் ஆலயத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக சுடர்கள் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து விசேட ஆத்மசாந்தி வழிபாடும் முன்னெடுக்கப்பட்டது, இவ்வழிபாட்டில் சந்திரகுமார், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த சந்திரகுமார், யுத்தத்தினால் உயிரிழந்தவர்களிற்கு இன்று நாம் அஞ்சலி செலுத்தினோம். கடந்த வருடங்களை போன்று இன்றும் நாம் அவர்களின் ஆத்ம சாந்திக்காக விளக்கேற்றி வழிபாட்டிலும் பங்குகொண்டோம் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை திருகோணமலையிலும் யுத்தத்தில் உயிரிழந்த மக்களிற்காக அஞ்சலி இன்று மாலை 6.00 மணியளவில் வெளிக்கடை தியாகிகள் மண்டபத்திற்கு முன்னால் நடைபெற்றது.

அரசாங்க படைகளின் ஆதரவோடு உயிரிழந்த 1 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

கடந்த 70 ஆண்டுகளாக இடம்பெற்று வந்த தமிழ் இனத்திற்கு எதிரா யுத்த குற்றங்களுக்கு சர்வதேச நீதி விசாரணை பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கும் நிகழ்வாக இது அமைந்திருந்தது.